நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் வேன் ஒன்று சென்று கொண்டிருந்த போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் பலியாகினர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள சவுந்திரபாண்டியபுரம் கிராமத்தில் சுடுகாடு பாதையை ஆளுங்கட்சிப் பிரமுகர் ஆக்கிரமித்து உள்ளார். அதனை மீட்பதற்காக பொதுமக்கள் 7-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று பாடை கட்டி ஒப்பாரி வைக்கும் போராட்டமும் நடத்தப்பட்டது.

விழுப்புரம் திருநாவலூரைச் சேர்ந்த சுதா என்பவர் தந்தையின் ஈமச்சடங்கு தொகை வழங்க, ஊராட்சி செயலாளர் பலராமன் ரூ.3,000 லஞ்சம் கேட்டதாக புகார் அளித்துள்ளார். இதையடுத்து ஊராட்சி செயலருக்கு கொடுக்க வேண்டிய லஞ்ச பணத்தை ஆட்சியருக்கு, சுதா மணி ஆர்டர் செய்துள்ளார். ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

கோவில்பட்டி, அம்பேத்கர்நகரில் உள்ள ஒரு வீட்டில் அனுமதியில்லாமல் நடத்தி வந்த தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து தீயை அணைத்ததால் குடியிருப்பு பகுதிகளில் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. அனுமதியின்றி ஆலை நடத்திய உரிமையாளர் சாமுவேல் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை.

தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் இந்திய மாதர் சங்கத்தினர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அடையகருங்குளத்தில் இயங்கி வந்த மதுக்கடை நெடுஞ்சாலைக்கு அருகில் இருந்ததால் அகற்றப்பட்டது. அதனை புதிய இடத்தில் திறக்க முயற்சிக்கப்பட்டது. அதற்கு பொதுமக்களிடம் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அதனையும் மீறி அங்கு கடை திறக்கப்பட்டதால் சுற்றுப்புற மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

திண்டுக்கல் ரெங்கப்பநாயக்கனூரை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் கடந்த 2010ஆம் ஆண்டு மனைவி சீனியம்மாளை தலையில் அம்மிகல்லை போட்டு கொலை செய்த வழக்கில் திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் குற்றவாளி பழனிச்சாமிக்கு  ஆயுள் தண்டனை மற்றும்  ₹ 1000 அபராதம் விதித்து  தீர்ப்பு வழங்கியுள்ளது

இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளதை கேரள அரசு ஏற்காது என அம்மாநில அமைச்சர்கள் கூறியுள்ளனர். பினராயி விஜயனின் ட்விட்டர் பக்கத்தில், 'இது இறைச்சி ஏற்றுமதியாளர்களுக்காக போடப்பட்ட சட்டம் என்பது தெளிவாக தெரிகிறது. ஏழைகள், விவாசாயிகள், தலித் இன மக்களை தாக்கும் ஓர் அறிவிப்பு' என கூறப்பட்டுள்ளது. 

இராமேஸ்வரம் தனுஷ்கோடி அரிச்சல்முனையில் பலத்த காற்றால் ராட்சத கடல் அலைகள் சாலைகளின் தடுப்புச் சுவரின் மீது மோதுகின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆக்ரோஷ அலைகளின் பிரமிப்பை பயணிகள் ரசித்து செல்கின்றனர்.

நெல்லையில் விவசாயிகள் குறைத்தீர்ப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில், தோட்டக்கலைத் துறை மூலமாக, விவசாயிகளின் வேளாண் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பை உருவாக்கித் தரும் வகையில், மானிய விலையில் காய்கனி விற்பனை தள்ளு வண்டிகள் வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர், வேளாண், தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பணபலன்கள் குறித்து வரும் 30-ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தமிழக அரசின் போக்குவரத்துத் துறை முதன்மை செயலருக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து எடுத்துக்கொண்ட வழக்கில் அதிரடி உத்தரவு.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த விவசாயிகள் கூட்டத்தில், 'கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும். மழை காலங்களில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்க தடுப்பணை அவசியம். இதன்மூலம் 600 கிராமங்கள், பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறும்', என விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் பிரசித்தி பெற்ற  சாமிதோப்பு அய்யா வைகுண்டர்  நாராயணசுவாமி திருக்கோவில் திருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

புதுச்சேரியில் திருமணமாகி 5 வருடங்களாக குழந்தை இல்லாததால் கோமதி(28) என்ற பெண், குழந்தைப்பேறு வேண்டி தனியார் கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சையில் இருந்தபோது உயிரிழந்தார். தவறான சிகிச்சையால்தான் கோமதி உயிரிழந்தார் என்று உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'மத்திய அரசின் உத்தரவு, மக்களின் அடிப்படை உணவு விருப்புரிமையை தடுக்கிறது. மதச்சார்பற்ற தன்மையை அசைத்துப் பார்க்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதை மத்திய பாஜக அரசு தவிர்க்க வேண்டும்' என அவர் கூறியுள்ளார். 

இலங்கையில் பெய்து வரும் கடும் மழையினாலும், மண் சரிவு ஏற்பட்டும் 57 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரத்னபுரி, களுத்துறை, பெல்மடுல்ல உள்ளிட்ட பகுதிகளில் இந்த உயிரிழப்பு நேர்ந்துள்ளதாக தெரிகிறது. மேலும், 110 பேர் வரை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொது தேர்வில் தேர்ச்சி சதவீதத்தில் விருதுநகர் மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பெறுவதற்கு மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்த 340 பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சிவஞானம் பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசினை வழங்கி கெளவுரவித்தார். 

திருச்சியில் டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மலைக்கோட்டை  பாபுரோடு பகுதியில்  அடுத்தடுத்து இருக்கும் இரண்டு டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி அப்பகுதி மக்கள் டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாகர்கோவில் செம்மாங்குடி சாலை மற்றும் அவ்வை சண்முகம் சாலை ஆகியவற்றில் குப்பைகளை சுத்தம் செய்யும் பணியை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்  இன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பாஜக தொண்டர்களுடன் பொன்னாரும் இணைந்து குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.

 

சோனியா காந்தியின் அழைப்பை நிராகரித்துவிட்டு மோடியை சந்திக்கவிருக்கிறார் பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார். நாளை மொரீஷியஸ் பிரதமருடன் மோடி கலந்துக் கொள்ளும் விருந்தில் அவர் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜனாதிபதி தேர்தல் குறித்த தனது நிலைப்பாட்டை நிதிஷ் குமார் மாற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது.

'டீம் 5' என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார் கிரிக்கெட் வீரர் ஶ்ரீசாந்த், இந்தப் படத்தில் ஶ்ரீசாந்த்  ஜோடியாக  நிக்கி கல்ராணி மற்றும் பேர்லேமேனி ஆகியோர் நடித்துள்ளனர்.சுரேஷ் கோவிந்த் 'டீம் 5' படத்தை மலையாளத்தில் நேரடியாக இயக்கியுள்ளார். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் டப்பிங் செய்து ரிலீஸ் ஆகவுள்ளது. 

'டங்கல்' படத்தோடு 'பாகுபலி'யை ஒப்பிட்டு வருவது குறித்து அமீர்கான் கூறுகையில், 'டங்கல் திரைப்படத்தை 'பாகுபலி' திரைப்படத்தோடு ஒப்பிட வேண்டாம். இதை நான் விரும்பவில்லை.ஆனால், நான் இன்னும் 'பாகுபலி' திரைப்படத்தைப் பார்க்கவில்லை, அந்தப் படத்தைப் பற்றி பல நல்ல செய்திகள் வருவதை கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

 

நேற்று தேசிய அளவில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் நேற்று மதியம் 2:45 மணிக்கு, துணை இயக்குநர் டாக்டர் அசோக்குமார் தலைமையில், 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடினார்கள். பின்னர் பொதுமக்களுக்கும் கேக் வழங்கினார்கள்.

கன்னியாகுமரி, மிடாலம் மீனவ கிராமத்தில் கடல் அரிப்பால் குடியிருப்புகளும், கல்லறை தோட்டங்களும் சேதமடைவதை தடுக்க பல முறை புகார் அளித்தும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து அப்பகுதி பெண்கள்  நாகர்கோவிலிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பூக்களால் கிடைக்கும் நன்மைகள், அவற்றை எப்படிச் சூட வேண்டும், எப்போது சூட வேண்டும் என்பதையெல்லாம் ஆயுர்வேதம் கூறுகிறது. வாசனை இருக்கும் வரையே மலர்களை தலையில் வைத்திருக்க வேண்டும். வாசனையில்லா மலர்களை வைக்கவே கூடாதாம். பூ சூடிக்கொள்வதால் கண்களுக்கு மிகவும் நல்லது என இயற்கை மருத்துவம் கூறுகிறது.